சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு: ரியா சக்கரவர்த்தி குற்றமற்றவர் – சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்!

cbi clean chit

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில் இது தற்கொலை என்று கூறப்பட்டாலும், சுஷாந்தின் தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தற்போது தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறி, அவர்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நீக்கி வழக்கை முடித்து வைத்துள்ளது.

ரியா சக்ரவர்த்தியோ அல்லது வேறு யாரும் சுஷாந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் சுஷாந்த் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 8, 2020 அன்று சுஷாந்தின் பாந்த்ரா குடியிருப்பில் இருந்து வெளியேறிவிட்டனர். அதன்பிறகு அவர்கள் சுஷாந்தை சந்திக்கவில்லை.

பொருட்கள் குற்றச்சாட்டு மறுப்பு: சுஷாந்தின் பொருட்களை ரியா எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார்.

சுஷாந்த், ரியா சக்ரவர்த்தியை குடும்பத்தின் ஒரு பகுதி என்று விவரித்துள்ளதால், ரியாவின் செலவுகள் சுஷாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தவை. எனவே இதில் எந்தவிதமான நிதி மோசடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆவணங்களை வெளியிடுவதாக ரியா சக்ரவர்த்தி அச்சுறுத்தினார் என்பது வாய்வழி செய்தி மட்டுமே என்பதால், அது தற்கொலைக்கு நேரடித் தூண்டுதலோ அல்லது சட்டவிரோதக் கட்டுப்பாடோ இல்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சிபிஐ-யின் இந்த அறிக்கையை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் “கண் துடைப்பு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version