நடிகர் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற “தெறி” திரைப்படத்தின் மறுவெளியீடு (Re-release) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. அந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஆரோக்கியமான வர்த்தகச் சூழலை உருவாக்கும் நோக்கில் “தெறி” படத்தின் மறுவெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் – அட்லீ கூட்டணியில் 2016-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், பொங்கல் ஸ்பெஷலாக மீண்டும் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் திரையரங்கிற்கு வருவதில் அண்மைக்காலமாகச் சில தடைகள் ஏற்பட்டு வருகின்றன.
விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் திகதி வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அது ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது “தெறி” மறுவெளியீடும் தள்ளிப்போயுள்ளதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதிய படங்கள் வெளியாகி சில வாரங்களுக்குப் பிறகு, பொருத்தமான மற்றொரு திகதியில் “தெறி” உலகளாவிய ரீதியில் மறுவெளியீடு செய்யப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.