ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக உலகநாயகன் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராகவும் கலைஞராகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தைப் பகுத்தறிவுடன் பாதுகாக்க வேண்டும். இந்தத் தடை ஜனநாயகத்தில் கலைக்கு அளிக்கப்படும் இடத்தை கேள்விக்குறியாக்குகிறது.
சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிறு வணிகர்களின் கூட்டு முயற்சியாகும். இத்தகைய தாமதங்கள் படைப்பாற்றலைத் தடுப்பதுடன் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்றன.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். படத்திற்கு வழங்கப்படும் ஒவ்வொரு ‘வெட்டு’ (Cuts) அல்லது திருத்தத்திற்கும் தகுந்த எழுத்துப்பூர்வமான காரணங்களை வழங்க வேண்டும்.
திரைத்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து அரசுடன் பேசி, தணிக்கை முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய தருணம் இது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று உலகம் முழுவதும் வெளியாகவிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியத்தின் சிக்கல்களால் கடைசி நேரத்தில் தடைபட்டது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கமல்ஹாசனின் இந்த அறிக்கை அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

