சல்லியர்கள் படத்திற்குத் திரையரங்குகள் மறுப்பு: நேரடியாக ஓடிடியில் வெளியீடு – சுரேஷ் காமாட்சி காட்டம்!

suresh4 1767331292

இயக்குனர் கிட்டு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ‘சல்லியர்கள்’ திரைப்படம் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால், நேரடியாக ஓடிடியில் (OTT) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜனவரி 1) வெளியாக வேண்டிய இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள ஆதங்கப் பதிவின் முக்கிய அம்சங்கள்:

ஈழப் போராட்டம் சார்ந்த இந்தத் தமிழ் படத்திற்கு வெறும் 27 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதனால் வெளியீட்டை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது.

“எங்கிருந்தோ வந்து எம் மக்கள் பணத்தைச் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனமான பிவிஆர், ஒரு திரையரங்கு கூட தரவில்லை. பெரிய படங்களுக்குக் கொடுக்கும் மரியாதையைச் சிறு படங்களுக்குத் தராதது ஒரு நவீன தீண்டாமை” என அவர் சாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கங்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும், கார்ப்பரேட் முதலாளிகளை முறைப்படுத்தத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஒரு ஈழத் தமிழ்ப் படத்தை வெளியிடக் கூடாது என்பதில் எங்கிருந்தோ வந்த கார்ப்பரேட் முதலாளிகள் தீர்மானிப்பது வெட்கக்கேடானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்குகளில் படம் வெளியாகாத நிலையில், ‘சல்லியர்கள்’ திரைப்படம் நாளை சனிக்கிழமை (03) முதல் ‘ஓடிடி பிளஸ்’ (OTT PLUS) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

“பத்திரிகையாளர்கள் பார்த்துவிட்டுப் பாராட்டிக் கலங்கிய இந்தப் படத்தை, உலகத் தமிழர்கள் பார்த்து ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என சுரேஷ் காமாட்சி உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். சிறு முதலீட்டுப் படங்கள் நசுக்கப்படுவது தொடர்ந்தால் தமிழ் சினிமா மெல்லச் சாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

 

Exit mobile version