சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரவி மோகன், தணிக்கைச் சான்றிதழ் சிக்கலால் தவித்து வரும் நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ரவி மோகன், ஊடகங்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது:
“‘ஜன நாயகன்’ திரைப்படம் உரிய நேரத்தில் வெளியாக வேண்டும் என்று ஒரு தீவிர ரசிகனாக வேண்டிக்கொள்கிறேன். விஜய் அண்ணாவின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, அவர் மிகப்பெரிய வெற்றியுடன் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.”
முன்னதாகத் தனது ‘X’ தளத்தில், “விஜய் அண்ணா.. உங்கள் தம்பிகளில் ஒருவனாக நான் என்றும் உங்கள் பக்கம் நிற்பேன். உங்களுக்கு வெளியீட்டுத் திகதி முக்கியமல்ல, நீங்கள்தான் ஆரம்பமே. அந்தத் திகதி எப்போதோ அன்றுதான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில் ஒரு கொடூரமான உளவுத்துறை அதிகாரியாக (Intelligence Officer) நடித்தது குறித்துப் பேசிய அவர், இது ஒரு கடினமான முயற்சி என்றும், ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
இருப்பினும், எதிர்காலத்தில் அடிக்கடி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
1965-ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட ‘பராசக்தி’ கடந்த ஜனவரி 10-ஆம் திகதி வெளியானது. அதேநேரம், விஜய்யின் ‘ஜன நாயகன்’ தணிக்கை அனுமதி கிடைக்காததால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரவி மோகனின் இந்தப் பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.