அழகாகப் பேசுபவர்கள் எல்லாம் முதல்வர் ஆக முடியாது: சென்னையில் கிச்சா சுதீப்பின் அதிரடிப் பதில்!

image 24983 1

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப், தான் நடித்துள்ள ‘மார்க்’ (Max) திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அரசியலில் நுழைவது குறித்த கேள்விக்குத் தனது பாணியில் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திகேயா இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ள ‘மார்க்’ படத்தில் கிச்சா சுதீப்புடன் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகி பாபு மற்றும் ரோஷ்ணி பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கியச் சம்பவங்கள் இடம்பெற்றன. நாயகி ரோஷ்ணி பிரகாஷிடம் பத்திரிகையாளர் ஒருவர், “மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்கள், படத்திலும் அப்படித்தானா?” எனக் கேள்வி எழுப்பினார். உடனடியாகச் குறுக்கிட்ட சுதீப், “இப்படி ஒரு கேள்வி படப்பிடிப்பில் எழாததால் தான் படம் நன்றாக வந்துள்ளது” எனக் கூறி, மேடையின் ஓரத்தில் இருந்த நாயகிகள் இருவரையும் மத்தியில் அமர வைத்து கௌரவித்தார்.

“எம்.ஜி.ஆர் போல அழகாகப் பேசுகிறீர்கள், நீங்களும் நடிகர் விஜய் போல அடுத்த முதலமைச்சர் ஆக ஆசைப்படுகிறீர்களா?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்குப் பதிலளித்த சுதீப் “அழகாகப் பேசுபவர்கள் எல்லாம் முதல்வர் ஆக முடியாது” என்று சுருக்கமாகத் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

தமிழக அரசியலில் நடிகர்களின் வருகை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், கிச்சா சுதீப்பின் இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version