உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு நட்சத்திரக் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தாலும், அவர் வளர்க்கப்படும் விதம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆராத்யாவிற்கு தற்போது 14 வயதாகிறது. இன்றைய காலக்கட்டத்தில் டீன் ஏஜ் குழந்தைகள் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், ஆராத்யாவிற்கு எனத் தனியாக செல்போன் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தந்தை அபிஷேக் பச்சன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆராத்யாவின் நண்பர்கள் அவருடன் பேச வேண்டுமானால், நேரடியாக ஐஸ்வர்யாவின் போனுக்கே அழைக்க வேண்டும். பள்ளியின் வீட்டுப்பாடம் மற்றும் கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த ஆராத்யாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வரும் சினிமா சர்ச்சைகள் அல்லது கிசுகிசுக்களை ஆராத்யா படிப்பதில்லை என்பதில் ஐஸ்வர்யா மிகவும் கவனமாக இருக்கிறார்.
அம்பானி நடத்தும் பள்ளியில் பயின்று வரும் ஆராத்யா, தனது பள்ளி நாடகங்கள் மூலம் தனது நடிப்புத் திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். “தங்கள் குடும்பம் இயங்குவதே சினிமாவால்தான்” என்பதை ஐஸ்வர்யா தனது மகளுக்குத் தெளிவாகப் புரியவைத்துள்ளார். இதனால் திரைத்துறையின் மீதும், சக மனிதர்கள் மீதும் ஆராத்யா மிகுந்த மரியாதையுடனும், பணிவுடனும் நடந்து கொள்வதாக அபிஷேக் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
சிறு வயதில் கேமரா வெளிச்சத்தைக் கண்டு மிரண்டு ஓடிய ஆராத்யா, தற்போது மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவராக வளர்ந்துள்ளார். தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் தயக்கமின்றி வெளிப்படுத்தும் திறன் அவரிடம் இருப்பதாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். நட்சத்திரப் புகழின் நிழலில் வளர்க்காமல், ஒரு சாதாரணக் குழந்தையாக அவரை வளர்க்கும் ஐஸ்வர்யாவின் இந்த ‘கண்டிப்பான’ வளர்ப்பு முறைக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

