இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘மங்காத்தா’, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரவுள்ள நிலையில், அதன் வெளியீட்டுத் தேதியில் உள்ள ஒரு சுவாரசியமான ஒற்றுமை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வருகிற ஜனவரி 23ஆம் தேதி (23.01.26) ‘மங்காத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முன்பதிவு மூலமாகவே இதுவரை ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த ஆர்வம் கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மங்காத்தா திரைப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் 50-வது மைல்கல் திரைப்படமாகும். இப்படத்தின் வெளியீட்டுத் தேதிகளுக்கும் ’50’ என்ற எண்ணிற்கும் உள்ள தொடர்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆச்சரியமான ஒற்றுமை தற்செயலாக நடந்ததா அல்லது படக்குழுவினர் திட்டமிட்டு இந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்தார்களா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் மீண்டும் ‘வினாயக் மகாதேவ்’ கதாபாத்திரத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

