‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

27 2

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் காரணமாக இப்படத்தின் வெளியீடு காலவரையின்றித் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தணிக்கை வாரியத்தின் ‘மறு ஆய்வு குழு’ (Revising Committee) முன்னிலையில் படத்தைப் திரையிட்டுக் காட்ட இன்று (மார்ச் 9) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மறு ஆய்வு மூலம் படத்திற்குச் சான்றிதழ் பெற்று, ரிலீஸ் தேதியை உறுதி செய்யலாம் எனப் படக்குழுவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கடைசி நிமிடத்தில் தணிக்கை குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, இன்றைய ஸ்க்ரீனிங் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திடீர் ஒத்திவைப்பு விஜய் ரசிகர்களிடையே மீண்டும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெறுவதில் நிலவும் இந்த இழுபறி, படத்தின் வெளியீட்டைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், சூழ்நிலைக்கு ஏற்ப புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது குறித்த கவலைகளைத் தாண்டி, ரசிகர்கள் படத்தின் அப்டேட்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரே படம் வெளியாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் திரைத்துறையினர் மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் சான்றிதழ் சார்ந்த சிக்கல்கள் ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டாலும், இதுபோன்ற நிர்வாக ரீதியான காரணங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் தள்ளிப்போடுவது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version