கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. எனினும், விமர்சன ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த இத்திரைப்படம், திரையரங்கில் வசூல் வேட்டை நடத்திய போதும், தயாரிப்பாளர்களுக்குப் பெரிய லாபத்தைத் தரவில்லை என்று செய்திகள் வெளியாகின.
இதற்கு முக்கியக் காரணம், அஜித்தின் சம்பளம் தான் எனத் தகவல் வெளியானது. அஜித்தின் சந்தை மதிப்பைத் தாண்டிய அளவுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டதால், படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாகவும், மேலும் இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் இன்னும் விற்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பேச்சுகளைத் தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நவீன் பேசும்போது, பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:
“குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் சாருக்கு ஒரு பிளாக்பஸ்டராக அமைந்தது. இந்தப் படம் எங்களுக்குப் பெரியளவில் இலாபமில்லை. அதே நேரத்தில் பெரிய நஷ்டமும் இல்லை. ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தோடு தமிழில் அறிமுகமானதில் மகிழ்ச்சியடைகிறோம். அஜித் சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்.”