கருவாடு ஆரோக்கியத்திற்கு பல பயன்களை அள்ளித்தருகின்றது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுகின்றனர்.
அந்தவகையில் தற்போது கருவாடை வைத்து செய்யக்கூடிய நெய்மீன் கருவாடு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- நெய்மீன் கருவாடு – 2 துண்டு
- சின்ன வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
- பூண்டு – 1/8 கப் (நறுக்கியது)
- தக்காளி – 3 (நறுக்கியது)
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 3/4 கப்
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிபின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
பிறகு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதே சமயம் மறுபுறம் கருவாட்டை கழுவி, வெதுவெதுப்பான நீரில் கருவாடை போட்டு, பத்து நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டி பின் வாணலியில் கழுவிய கருவாடை போட்டு, அதில் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அதில் கருவாடு மூழ்கும் வரை நீரை ஊற்ற வேண்டும்.
பின்பு நன்கு கிளறவிட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து மூடியைத் திறந்து, கருவாடு வெந்துள்ளதா என்பதை கரண்டியால் அழுத்தி பார்க்க வேண்டும். கருவாடு மென்மையாக இருந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.
இப்போது கருவாட்டில் உள்ள நடுமுள்ளை நீக்கிவிட்டு, மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு வற்றிவிட்டால், சுவையான நெய்மீன் கருவாடு தொக்கு தயார்.
Leave a comment