நடிகர் அஜித்குமாரும், இயக்குநர் சிறுத்தை சிவாவும் மீண்டும் ஒருமுறை திரைப்படத்திற்காக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் அஜித்தின் புதிய திட்டம் ஒன்றிற்காக மலேசியாவில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.
இயக்குநர் சிவா, நடிகர் அஜித்தை வைத்து ஏற்கெனவே ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, ‘விவேகம்’ எனப் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது நடிகர் அஜித், மலேசியாவில் சிற்றூந்து பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அங்கு அஜித்துடன் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்தச் சந்திப்பைக் கண்ட இந்திய ஊடகங்கள், சிறுத்தை சிவா அஜித்துக்குப் புதிய கதை சொல்லவே அங்கு சென்றுள்ளதாகவும், இந்தக் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மேலும், இந்தத் திரைப்படத்தில் அஜித்தின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படம் (Documentary) ஒன்று உருவாக்கப்படலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

