‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், தனது அடுத்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் கைகோர்க்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் எச்.வினோத் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 9ஆம் திகதி வெளியாக உள்ளது.
‘ஜனநாயகன்’ பட வேலைகளைத் தொடர்ந்து, எச்.வினோத் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இந்தப் படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். (Sam C.S.) இசையமைக்க உள்ளார். இதனை அவரே உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விஜய்யின் பிரம்மாண்டமான ஆக்ஷன் படத்தை முடித்த கையோடு, தனுஷின் மாறுபட்ட நடிப்புத் திறனைப் பயன்படுத்தும் வகையில் எச்.வினோத் ஒரு வலுவான கதையைத் தயார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் (7 Screen Studio) இந்தப் படத்தைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

