திரையுலகைத் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களில் (Car Racing) தடம் பதித்து வரும் நடிகர் அஜித்குமாரின் விளையாட்டுப் பயணம், தற்போது பிரம்மாண்ட ஆவணப்படமாக உருவாகி வருகிறது.
அஜித்தின் ‘கிரீடம்’ படத்தை இயக்கிய ஏ.எல். விஜய், தற்போது இந்த ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். இதற்காக அவர் அஜித் பங்கேற்கும் சர்வதேச பந்தயக் களங்களுக்கே நேரில் சென்று நேரடி காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார்.
இந்த ஆவணப்படத்திற்கு “Racing Isn’t Acting” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாய், பெல்ஜியம் மற்றும் பார்சிலோனா ஆகிய நாடுகளில் அஜித் மேற்கொண்ட பயிற்சிகள் மற்றும் ‘அஜித் குமார் ரேசிங்’ (AKR) அணியின் செயல்பாடுகள் இதில் முதன்மையாக இடம்பெறுகின்றன.
இந்த ஆவணப்படம் வெறும் பந்தயங்களை மட்டும் காட்டாமல், அஜித் சந்தித்த சவால்களையும் விவரிக்கவுள்ளது. பந்தயக் களத்தில் அவர் எதிர்கொண்ட இடர்ப்பாடுகள் மற்றும் சமீபத்தில் டுபாயில் நிகழ்ந்த சிறு விபத்திலிருந்து மீண்டு வந்து அவர் படைத்த சாதனைகள்.
நடிப்பைத் தாண்டி விளையாட்டின் மீது அவர் கொண்டுள்ள விடாமுயற்சியையும் அர்ப்பணிப்பையும் உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இது அமையும்.
அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆவணப்படம், விரைவில் ஓடிடி (OTT) தளம் ஒன்றில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

