நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் ஆகியோர் வரும் பிப்ரவரி 14-ஆம் திகதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை எனத் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தனுஷும் மிருணாள் தாகூரும் ரகசியமாகக் காதலித்து வருவதாகவும், அடுத்த மாதம் (பிப்ரவரி 14) நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வைரலாகின.
இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடைபெற்ற மிருணாள் தாகூரின் திரைப்பட வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்துகொண்டது மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் இந்த வதந்திகளுக்கு வித்திட்டன.
இந்தத் திருமணச் செய்தியை தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோருக்கு நெருக்கமான தரப்பினர் முற்றாக மறுத்துள்ளனர்.
“இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது. தயவுசெய்து இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம்” என தனுஷுக்கு நெருக்கமான ஒரு நபர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மிருணாள் தாகூர் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தனது புதிய படங்களின் வெளியீடுகளில் பிஸியாக இருப்பார் என்பதால், அவர் இப்போது திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை என அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு நேர்காணலில் பேசிய மிருணாள் தாகூர், தனுஷ் தனது ஒரு “நல்ல நண்பர்” மட்டுமே என்றும், தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்த தனுஷ், 2024 நவம்பர் மாதம் சட்டப்படி விவாகரத்து பெற்றார். அவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது அவர் தனது நடிப்பு மற்றும் இயக்கத்தில் (இட்லி கடை, தேரே இஷ்க் மே) முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

