நடிகர் கார்த்தி நடித்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பான சிக்கலில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாகத் தடை விதித்திருந்தது.
இந்தத் தடையை நீக்கக் கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
கடந்த டிசம்பர் 12-ஆம் திகதி வெளியாக வேண்டிய இந்தப் படம், சட்டச் சிக்கல்களால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பால், சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை (கடனைத் திருப்பிச் செலுத்துவது) நிறைவேற்றினால் மட்டுமே படம் திரைக்கு வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

