நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் போலியான செய்திகளையும், மோசடிகளையும் நம்ப வேண்டாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மோசடிச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் RKFI வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள். “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.”
“நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.”
“எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்.”
திரையுலகில் வாய்ப்புத் தேடும் நபர்கள் இது போன்ற போலியான அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

