இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதியரசர் துஷார் ராவ் கெடேலா (Justice Tushar Rao Gedela) பிப்ரவரி 13 அன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்குச் சொந்தமானது எனச் சரிகம நிறுவனம் வாதிட்டது. அந்தந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறையாக ஒப்பந்தம் செய்து, உலகளாவிய ரீதியில் நிரந்தரமான காப்புரிமையைத் தாங்கள் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி Amazon Music, iTunes, JioSaavn போன்ற டிஜிட்டல் தளங்களில் பிப்ரவரி தொடக்கத்தில் பதிவேற்றியமை சட்டவிரோதமானது எனச் சரிகம தரப்பு வாதிட்டது.
ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட இசைக்கு அந்தத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்ற இந்தியாவின் 1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின் விதியைச் சரிகம தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறிப்பிட்ட 134 படப் பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடை உத்தரவு இளையராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவருக்கும் பொருந்தும். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதற்குள் இளையராஜா தரப்பு தனது பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ‘என் இனிய பொன் நிலாவே’ போன்ற பாடல்களின் உரிமையும் சரிகம நிறுவனத்திற்கே சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த புதிய தடை உத்தரவு இளையராஜாவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

