சினிமாவின் மீது தீராத காதல் கொண்டுள்ள பிரபலங்களில் ஒருவரும், இந்திய சினிமாவின் முன்னணி நடிகருமான கமல்ஹாசனின் கனவுத் திரைப்படம் என்றால், அது ‘மருதநாயகம்’ தான். இந்தத் திரைப்படம் குறித்த புதிய நம்பிக்கையை அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த மாவீரன் முகம்மது யூசுப் கான் (மருதநாயகன்) என்பவரின் வரலாற்றைப் பற்றிய திரைப்படம் இது.
கமல்ஹாசனே இயக்கி நடிக்கத் திட்டமிட்ட இந்தப் படத்தில், அபிராமி போன்ற கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படத்தின் தொடக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வந்திருந்தது அப்போது மிகவும் வைரலாகப் பேசப்பட்டது.
படத்திற்காக நிறைய சிறப்பான விஷயங்களைச் செய்து வந்த கமல்ஹாசன், அப்போதைக்கு இருந்த தொழில்நுட்பம் மற்றும் பட்ஜெட் காரணங்களால் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
தற்போது சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காகக் கோவா சென்றிருக்கும் கமல்ஹாசனிடம், ‘மருதநாயகம்’ குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், “தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மருதநாயகம் படம் சாத்தியமாகலாம் என்பது என்னுடைய நம்பிக்கை,” என்று தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பைத் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் மீண்டும் அதிகரித்துள்ளது

