தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி, இந்தியத் திரையுலகின் பல உச்ச நட்சத்திரங்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்த கே. எஸ். நாராயணசாமி (K. S. கோபாலி) இன்று (நவ 18) காலமானார்.
அவருக்கு வயது 92 புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் (National School of Drama) முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கே. எஸ். நாராயணசாமி. இவர் டாக்டர் பட்டமும் பெற்றிருந்தார்.
இந்தியத் திரைப்பட உலகில் பல முன்னணி நடிகர்களை உருவாக்குவதில் இவர் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்திற்கு நடிப்பு கற்றுக்கொடுத்தது இவர்தான்.
ரஜினி மீது அளவில்லா அன்பு வைத்திருந்த இவர் தான், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் திரைப்படப் பயிற்சிக் கல்லூரிக்கு வந்தபோது, ரஜினிகாந்தை தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் மட்டுமின்றி, அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி, ராதாரவி உள்ளிட்ட பல்வேறு உச்ச நட்சத்திரங்களையும், பல இயக்குநர்களையும் இவர் பயிற்சி கொடுத்து உருவாக்கியுள்ளார்.
கே. எஸ். நாராயணசாமி (K. S. கோபாலி) இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர் ரஜினிகாந்த், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

