‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் நடிகராகப் பிரபலமானா அருண் ராஜா காமராஜ். ‘நெருப்பு டா’, ‘வரலாம் வரலாம் வா’, ‘கொடி பறக்குதா’, ‘செம வெயிட்டு’ உள்ளிட்ட பல பாடல்களை எழுதி, பாடியுள்ளார். பின்னர் ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ மற்றும் ‘லேபிள்’ (வெப் தொடர்) போன்றவற்றை இயக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு, வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பிற்குப் பிறகு படம் குறித்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது விஷ்ணு விஷால் அளித்த பேட்டி ஒன்றில் இப்படத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.
விஷ்ணு விஷால் கூறியதாவது: “அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஒரு வித்தியாசமான விளையாட்டுப் படம் (Sports Film). இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் அல்லது ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்கும்.”
இதன் மூலம், அருண் ராஜா காமராஜ் தனது முதல் படமான ‘கனா’வுக்குப் பிறகு மீண்டும் ஒரு விளையாட்டை மையப்படுத்திய கதைக்களம் கொண்ட படத்தைக் கையிலெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

