ஐதராபாத் மாலில் பரபரப்பு: நடிகை நிதி அகர்வாலிடம் ரசிகர்கள் அத்துமீறல் – போலீசார் தீவிர விசாரணை!

44539566 7

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்து அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள பிரபல லுலு மாலில் (Lulu Mall) இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைக் காண ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டதால் மாலில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் மேடையை நோக்கி முன்னேறியதால் பதற்றம் நிலவியது.

நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் தனது காரை நோக்கிச் சென்றபோது, ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்திச் சில ரசிகர்கள் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகத் தெரிகிறது. படக்குழுவினர் அவரைப் பத்திரமாக மீட்டு காரில் ஏற்றியபோது, ரசிகர்களின் இச்செயலால் அதிருப்தியடைந்த நிதி அகர்வால், தனது முக பாவனையிலேயே கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதற்காக லுலு மால் மேலாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் தவறாக நடந்துகொண்ட நபர்களை சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.

 

 

Exit mobile version