பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சிஷ்யனாக அறிமுகமாகி, ‘ராஜா ராணி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அங்கீகாரம் பெற்றவர் அட்லீ. தொடர்ந்து வெற்றிப் படங்களை அளித்த இவர், கடைசியாக ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் ரூ. 1000 கோடிக்கு மேலான வசூலைக் குவித்தது.
தற்போது, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ரூ. 800 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ரூ. 800 கோடி பட்ஜெட் பட வேலைகளுக்கு நடுவே, இயக்குநர் அட்லீ ஒரு பிரம்மாண்ட விளம்பரப் படத்தையும் இயக்க உள்ளார். பான் இந்தியா படங்களின் பட்ஜெட்டுக்கு நிகரான, ரூ. 150 கோடி பட்ஜெட்டில் இந்த விளம்பரம் எடுக்கப்பட உள்ளது.
‘சிங்ஸ் தேசி சைனீஸ்’ என்ற பிராண்டிற்கான இந்த விளம்பரத்தில், ரன்வீர் சிங், பாபி தியோல், ஸ்ரீலீலா போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதுவே இந்தியாவிலேயே மிகவும் அதிக செலவில் உருவாகும் விளம்பரப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை அட்லீ மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வருவதுடன், இதற்காகப் பெரிய செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் இருக்கும் என்றும் தெரிகிறது.