தனது திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாத நடிகர் அஜித் குமார், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வணிக ரீதியான விளம்பரம் ஒன்றில் நடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி’ (Campa Energy) பானத்தின் விளம்பரத்திலேயே அஜித் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
2005-ஆம் ஆண்டு ‘நெஸ்கஃபே’ (Nescafe) விளம்பரத்தில் நடித்த பிறகு, அவர் வேறு எந்தவொரு வணிக விளம்பரத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
அஜித் திடீரென விளம்பரத்தில் நடிக்கச் சம்மதித்ததற்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் உள்ளதாகத் தெரியவருகிறது. அஜித் குமார் தற்போது சொந்தமாக ‘அஜித் குமார் ரேஸிங்’ (Ajith Kumar Racing) என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார்.
இந்த ரேஸிங் அணிக்கு ‘கேம்பா எனர்ஜி’ நிறுவனம் அதிகாரப்பூர்வ ‘எனர்ஜி பார்ட்னராக’ (Official Energy Partner) இணைந்துள்ளது. தனது விளையாட்டு அணியின் வளர்ச்சிக்கும், சர்வதேச பந்தயங்களுக்கான முதலீடுகளுக்காகவுமே அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. “ஒரு நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை” எனத் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்குக் கூட வராத அஜித், தனது சொந்த ரேஸிங் தொழிலுக்காக விளம்பரத்தில் நடிப்பது ஏன் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
குளிர்பானங்கள் உடலுக்கு ஆரோக்கியமற்றவை என்று முன்பு கருதப்பட்ட நிலையில், தற்போது அஜித்தே அதற்கு விளம்பரம் செய்வது ரசிகர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையாதா என்றும் விவாதிக்கப்படுகிறது.
அதேவேளையில், ஒரு சர்வதேச தரத்திலான விளையாட்டு அணியை நடத்துவதற்குப் பெருமளவு நிதி தேவைப்படுவதால், அவர் இம்முடிவை எடுத்திருப்பார் என அவரது தீவிர ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள அஜித்தின் 64-வது படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அஜித்தின் கார் ரேஸிங் பயணத்தைத் தொகுத்து சுமார் 90 நிமிட கால ஆவணப்படம் ஒன்று, அவரது பிறந்தநாளான மே 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

