பிரபல நடிகை ஒருவரைக் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முதல் குற்றவாளியான பல்சர் சுனி (சுனில்) உட்பட ஆறு குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பல்சர் சுனி என்ற சுனில் உட்படக் கடத்தலையும் வன்கொடுமையையும் நேரடியாகச் செய்த ஆறு பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
ஆறு பேருக்குமான தண்டனையை நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார். குற்றத்தை நேரடியாகச் செய்த ஆறு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் 8ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த பிரபல நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்றம் அவரை முன்னதாக விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கேரள மாநில அரசு மேலுமுறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.