தற்போது பிரபஞ்சம் விரிவடைவதற்குக் காரணமாக இருக்கும் ‘கருப்பு ஆற்றல்’ (Dark Energy) எதிர்காலத்தில் வலுவிழக்கக்கூடும் என்றும், அதன் விளைவாகப் பிரபஞ்சம் மீண்டும் ஒரு புள்ளியில் சுருங்கி அழியும் வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
‘Royal Astronomical Society’ இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபஞ்சத்தை மிக வேகமாக விரிவடையச் செய்யும் ஆற்றலாகக் கருதப்படும் ‘கருப்பு ஆற்றல்’, ஒரு கட்டத்தில் மந்தமடையத் தொடங்கும். அப்போது ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் அதிகரித்து, விரிவடைதல் நின்று பிரபஞ்சம் தலைகீழாகச் சுருங்கத் தொடங்கும்.
விஞ்ஞானிகள் இந்த நிகழ்வை ‘Big Crunch’ (பெருஞ் சுருக்கம்) என்று அழைக்கின்றனர். இது பிரபஞ்சத்தின் தொடக்கமான ‘Big Bang’ (பெருவெடிப்பு) நிகழ்விற்கு நேர் எதிரான ஒன்றாகும். அதாவது, கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதி மீண்டும் ஒரு சிறிய மற்றும் அடர்த்தியான புள்ளியில் ஒன்றிணைந்துவிடும்.
இந்த அழிவு உடனடியாக நிகழப்போவதில்லை என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி அழியத் தொடங்குவதற்கு இன்னும் சுமார் 19.5 பில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு பிரபஞ்சத்தின் முடிவு குறித்த தற்போதைய அறிவியல் புரிதல்களில் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

