கல்வியானது நுண்மதி ஆற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் வளர்க்கின்றது. நற்பண்புகளை வளர்ப்பதன் மூலமே வாழ்க்கையின் குறிக்கோளை கல்வியால் பெற்றுக்கொடுக்க முடியும்.
கல்வியே வாழ்க்கை வாழ்க்கையே கல்வி இதனையே ஆங்கிலக் கவிவாணர் வேட்ஸ்வர்த் “மனிதத் தன்மையினை மனிதர் பெறத் துணையாக விளங்குவது கல்வி” என்று கல்வி வரையறை கண்டார்.
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் பிரதான கல்வி நிறுவனமாக விளங்கியது பாடசாலையாகும். வரையறுக்கப்பட்ட இலக்குகளையும் நோக்கங்களையும் கலைத்திட்ட அமுலாக்கத்தினூடாக மாணவர்களிடத்தில் உருவாக்கும் வகையில் பாடசாலைச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இவற்றைத் திருப்திகரமாக முன்னெடுப்பதற்கு சீரான மாணவர் பாடசாலையிலிருத்தல் அவசியமாகும். சீரான மாணவர்கள் மட்டும் இருந்தால் போதாது. அவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற மனவிருப்புடன் இருத்தல் வேண்டும்.
வளர்ந்து வரும் உலகளாவிய கல்வி அபிவிருத்திச் செயல்நெறிகளுக்கு இணங்க இலங்கையின் கல்வி விருத்தியும் மாற்றம் பெற்றுக்கொண்டே செல்கின்றது எனலாம்.
கல்வியமைப்பானது மாற்றமுறும் போது அதற்கு ஈடு கொடுக்க முடியாமலும் அதேவேளை மாற்ற ங்களை ஏற்றுக்கொள்ளும் திறனின்மையால் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைவிலகும் தன்மை இன்று அதிகரித்துச் செல்லும் போக்குக் கூடுதலாகக் காணப்படுகின்றது எனலாம்.
உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையாக கொவிட் -19 அலை பல துறைகளை முடக்கியுள்ளதோடு புதிய மாற்றுத் தீர்வினை எதிர்பார்த்துள்ளது. எனினும் இதில் கல்வி சார்ந்த செயற்பாடுகளில் மாணவர்கள் சுமார் 2 வருட காலம் வீட்டிலிருந்து கற்க வேண்டிய நிலையில் தொழில்நுட்பத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் பாடசாலை தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள் வரை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தித்து வருகின்றமை முக்கியமானதாகும். மாணவர்கள் மத்தியில் கல்வி மீதான அக்கறை குறைந்து செல்லுமையைஇ பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இதற்கு காரணமாக உள்ளது.
இவ்வாறு, மாற்றமுறும் கற்றல் நிலைகளிலிருந்து பின்னடைவுகளை எதிர்நோக்கும் மாணவர்கள் உளவியலாளரின் தீவிர கவன ஈர்ப்பைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
கல்வி நடவடிக்கைகளிலிருந்து மாணவர் இடைவிலகும் நிலை மாணவரின் அடிப்படையான உளவியல் செயன்முறையின் ஒழுங்கு குலைவினால் ஏற்படுகின்றது. இவ் இடைவிலகும் தன்மையானது குடும்ப நிலை, தாம் முதன்முதலில் சந்திக்கும் ஆசிரியர்கள், பாடசாலை, சகபாடிகள் போன்ற இன்னோரன்ன காரணிகளால் ஏற்படலாம்.
இடைவிலகல் என்ற எண்ணக்கரு நாடாளவிய ரீதியில் பெரும் பிரச்சினையாக கல்விப் புலத்தில் காணப்படுகின்றது. பொதுக் கல்வியைப் பூர்த்தி செய்யாது இடையில் பாடசாலையை விட்டு மாணவர் விலகுவதே இடைவிலகலாகும்.
கட்டாய கல்விக்காலம் எனக் கருத்தப்படும் 6-14 வயது வரையிலாவது கற்றல் வாய்ப்பினைத் தொடராமல் விலகுகின்றனர். கல்வி சிறுவர்களின் உரிமை என ஐ.நா.சாசனம் முக்கியத்துவப்படுத்துவதும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். சிறுவர்களின் கல்வி வாய்ப்பானது.
1. பாடசாலையில் சேரவேண்டிய வயதுக்குரிய காலத்தில் சேராதோர்.
2. பாடசாலையில் சேர்ந்தவர்களில் பொதுக்கல்வியைத் தொடராமல் இடைவிலகிச் செல்வோர் எனும் வகைப்பாட்டிற்கு இணங்க தமது கல்வியைத் தொடராமல் இழப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இடைவிலகலானது பல காரணங்களால் ஏற்படுகின்றது. அதாவது குடும்பப் பின்னணி பாடசாலை பின்னணி சமூகச் சூழல், கலைத்திட்ட இடர்பாடுகள், கற்போனின் மனநிலை ஊக்கம், பொருளாதார நிலை, சமூக நிலையியல், பழக்கவழக்கங்கள், பரீட்சை மையக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், ஆசிரியர் மற்றும் வள ஆளணியினரின் கடமைகளின் திருப்தியின்மை, பய உணர்வு ஆகிய பிரச்சினைகள் மாணவர்கள் இடைவிலகுவதற்கான காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளது.
இடைவிலகல் நூற்றுவீதம்
வறுமை 48.29%
பாலியல் குற்றம் 14.18%
பொருத்தமற்ற பாடத்திட்டம் 12.01%
பாடசாலை இல்லாமை 4.01%
தொழிலுக்குச் செல்லல் 1.09%
காரணமின்மை 20.42%
மொத்தம் 100%
(கல்வியியல் ஆய்வு -2019)
இலங்கை நாட்டின் பல பகுதிகளில் இப் பிரச்சினையானது பாரிய தலையிடியாக மாறி வருகின்றது. காரணம் பொருளாதார நெருக்கடியும் யுத்த நிலையுமே பாரிய பிரச்சினையாகும். அதுவும் இப்பிரச்சினையானது நகரப் புறங்களை விடக் கிராமப் புறங்களில் கூடுதலாகக் காணப்படுகின்றது. ஏனெனில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பெற்றோர் கல்வி மீது காட்டும் ஆர்வம் குறைவடைவதனாலாகும்.
கிராமப்புறப் பெற்றோர்களின் பொதுவான கருத்தின்படி தம் பிள்ளைகள் ஓரளவு படித்திருந்தால் போதும் எனும் மனநிலையுமாகும். இன் நிலைமை மாறும்போதே இடைவிலகல் என்பதும் தூரவிலகக் கூடிய நிலை ஏற்படும்.
இடைவிலகலிற்கான பல பொதுவான காரணங்கள் கூறப்படுவதில் குடும்ப பிரச்சினைகள் முக்கியம் பெறுகின்றன. மகிழ்வான குடும்பச் சூழல் பிள்ளைகளின் கல்விக்கு அடித்தளமாகும். குடும்ப அங்கத்தவர்கள் காரணமின்றி பிள்ளைகளை வைத்துக் கொண்டே தம்மிடையே முரண்படும் போதே பிள்ளைகள் உளத்தாக்கமடைகின்றனர்.
அத்துடன் பிள்ளைகளுடன் அன்பு காட்டி நடக்க வேண்டிய காலப்பகுதியில் பெற்றோர் வெளிநாடுஇ வேலைப்பளு என பிரிந்து வாழ்வதனாலும் பெற்றோரின் அக்கறையின்மையும் கல்வி அறிவின்மையும் இடைவிலகலிற்குக மாணவர்களை இட்டுச் செல்கின்றது எனலாம்.
மேலும் கல்வி விருத்திக்கு பொருளாதாரம் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இதில் மலையக மாணவர்கள் பெரும் பாதிப்புக்களை அடைந்து வருகின்றனர். மேற்படி கல்வி விருத்திக்கு பின்னணியாக விளங்கும் பொருளாதாரம் சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் கற்றலுக்கு தடையை ஏற்படுத்தி விடுகின்றது.
அவ்வகையில் குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள்இ பிள்ளைகளின் பாடசாலைத் தேவைகள் நிறைவேற்றப்படாமை, வகுப்பறையில் காணப்படும் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள், அதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் புறக்கணிப்படுதல் போன்றன பிள்ளைகளிடம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் அவர்களது கற்றலிற்கு தடையாக அமைவதுடன் இடைவிலகலுக்கு காரணமாகின்றது.
வறுமையான வீட்டுச் சூழலில் வளரும் பிள்ளையானது குடும்ப நிலை காரணமாக தானும் தனது உழைப்பை நல்க வேண்டும் என நினைத்து தொழிலில் ஈடுபடும் போதும் வீட்டின் வறுமைச் சூழல் உண்பதற்கே கேள்விக்குறியாக இருக்கும் போதும், படிப்பு எதற்கு எனும் வினாவை எழுப்பும் போதும் மாணவரது மனநிலை மாற்றமடைந்து பாடசாலைக் கல்வி முடிவிற்கு கொண்டுவரப்படுகின்றது.
நம் வாழ்க்கையில் எதிர்பாராது பல விடயங்கள் ஏற்படுகின்றன. இது சகலருக்கும் பொதுவானதே. இவ்வகையில் கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடும் பிள்ளைகளுக்கு திடீரெனத் தோன்றும் நோய்கள், விபத்துக்கள் பெற்றோரின் இழப்புக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தங்கள் இனக்கலவரங்கள் சாதி முரண்பாடுகள் போன்றன அவர்களின் வாழ்க்கையைப் பாதிப்படையச் செய்யலாம்.
இவை ஒருவரால் எண்ணி ஏற்படுவதில்லை. எதிர்பாராது நிகழ்வது. இவ்வாறான நிகழ்வுகள் கூட சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் இடைவிலகலிற்குக் காரணமாகின்றது.
கற்றலில் மாணவர்கள் சலிப்படைந்து இடைவிலகலிற்கு இட்டுச்செல்கின்ற இன்னுமோர் காரணமாக கற்பிக்கும் முறையாகும். வகுப்பறையில் மெல்லக் கற்போர் மீத்திறன் உடையோர் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் எனப் பலதரப்பட்டோர் இருக்கும் போது வேறுபடுத்தி அவர்களுக்கேற்ற வகையில் கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்ளாது ஒரே முறையைப் பயன்படுத்திக் கற்பிக்கும்போது பாடத்தில் சலிப்பு ஏற்பட்டு இடைவிலகலிற்கு இட்டுச் செல்கின்றது.
எனவே இத்தகைய நிலையிலிருந்து மாணவர்களை மீட்டெடுத்து சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நாம் காத்திரமான முடிவுகளை எடுத்தல் வேண்டும். இதற்காக இடைவிலகலைக் குறைப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும.
ஆகவே மாணவர்களின் இடைவிலகலைக் குறைப்பதற்காக கையாளக் கூடிய நடவடிக்கைகளையும் இனங்காண வேண்டும். அதாவது ஆசிரியரானவர் பாடசாலைக்குள் உள் நுழையும் பிள்ளையைத் தன் பிள்ளைபோல கருதிச் செயற்பட வேண்டும். வகுப்பறையானது முறையாக ஒழுங்குப்படுத்தப்பட்டு மாணவர்களைக் கவரும் வகையிலும் கற்கத் தூண்டும் வகையிலும் அமைதல் வேண்டும்.
ஆசிரியரானவர்கள் பாடப்பொருளை மாணவர்களின் யதார்த்த வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் கற்பிப்பதில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். ஆசிரியர் தமது மாணவர்களிடம் அவர்களின் முன்னேற்றம் பற்றி அடிக்கடி அறிவுறுத்தி கொண்டிருக்க வேண்டும்.
வகுப்பிலுள்ள சகல மாணவர்களையும் சமமாகக் கருதுதல் வேண்டும். மாணவர்கள் தாம் கற்றவற்றை மீட்பதற்கு குழு முறையமைப்பை ஏற்படுத்திக்க கொடுக்க வேண்டும். வகுப்பிலுள்ள சகல மாணவர்களுக்கும் அடிக்கொரு தரம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
மேலும் மாணவர்களின் திறனைக்; கருத்தில் கொண்டு அதற்கேற்பக் கற்பிக்க வேண்டும். பரீட்சை முறைகளுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து குழுமுறைக் கற்பித்தலிற்கு முதலிடம் வழங்க வேண்டும். கற்பிக்கும் போது மாணவர்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் கட்புல – செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்துதல் வேண்டும். ஏனெனில் இது மாணவர்களது கற்றலை தூண்டக் கூடியது.
இவ்வாறான பல்வேறு நடவடிக்கைகளையும் இடைவிலகலைக் குறைப்பதற்காக எடுக்கும் போது ஒவ்வொரு நாட்டினதும் மனிதவளம் மேம்பட்டு நாடு அபிவிருத்தியடையச் சந்தர்ப்பம் ஏற்படுவதோடு எமது தமிழ் சமுதாயம் முன்னேற்றமடையவும் சமூகத்தில் கல்விக்கற்ற கூட்டத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் வாய்ப்பாக அமையும்.
#SriLankaNews