விண்வெளியில் அபூர்வ நிகழ்வு: நாளை அதிகாலை வானில் விண்கல் மழை; இன்று ‘சுப்பர் மூன்’!

celestialevent 1735297800

2026-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வானில் பல விசேட நிகழ்வுகள் அரங்கேறவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இன்றும் (03) நாளையும் (04) இரவு வானில் பிரதான விண்கல் மழை தென்படவுள்ளது.

நாளை அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை இந்த நிகழ்வை மிகத் தெளிவாக அவதானிக்கலாம். வானின் வடகிழக்குத் திசையில் மணித்தியாலத்திற்குச் சுமார் 80 விண்கற்கள் வரை விழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வழக்கமான வால்வெள்ளிகளிலிருந்து உருவானது அல்லாமல், சிறுகோள்களின் (Asteroids) சிதறிய பகுதிகளாகக் கருதப்படுகிறது.

இன்று ஜனவரி 3-ஆம் திகதி சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் ‘சுப்பர் மூன்’ நிகழ்வு ஏற்படுகிறது. இன்று பிற்பகல் 3.32 மணியளவில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமான புள்ளியை அடைகிறது.

சந்திரன் வழக்கமான நாட்களை விட 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும். சந்திரன் பூமியைச் சுற்றி வரும் நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் (சுமார் 3,84,000 கி.மீ சராசரி தூரத்திற்கும் குறைவாக) வரும்போது பௌர்ணமி ஏற்பட்டால் அது சுப்பர் மூன் என அழைக்கப்படுகிறது.

இந்த 2026-ஆம் ஆண்டில் வழமைக்கு மாறாக 13 பௌர்ணமி தினங்கள் வருகின்றன. குறிப்பாக மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் இடம்பெறவுள்ளதாகக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வானத்தைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் மேகமூட்டம் இல்லாத பட்சத்தில், அதிகாலையில் வடகிழக்கு வானில் இந்த அதிசயத்தைக் கண்டு களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version