அரசியல்
பசிலின் முன்னேற்றத்தால் ஆட்டம் கண்ட ரணிலின் அரசியல்
பசிலின் முன்னேற்றத்தால் ஆட்டம் கண்ட ரணிலின் அரசியல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலில் ஆதரவளிக்க முயன்ற ஒரு அரசியல் கூட்டமைப்பு பசிலின் அண்மைய முன்னேற்றங்கள் காரணமாக ஆட்டம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் பிரதான மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நடத்திய சந்திப்பின் விளைவு இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் போது அவரை பதிலுக்கு, முன்மொழியப்பட்ட புதிய கூட்டணியை நிராகரிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் இந்த அரசியல் மூலம், இப்போது மந்தமான நிலையில் உள்ள பொதுஜன பெரமுனவை மீண்டும் ஒரு சக்திவாய்ந்த அரசியல் கட்சியாக புத்துயிர் பெறவைக்க முடியும் என்று பசில் ராஜபக்ச நம்பிக்கை கொண்டுள்ளார்.
இதேவேளை புதிய கூட்டணியின் பின்னணியில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளதுடன் சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவர் பெற்று வெற்றிகரமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.
ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் இருந்து செயற்படும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் பிரசாரம் முன்னெடுத்துள்ளார்.
இந்த எண்ணிக்கை அதிகரித்ததால், அவர் ராஜகிரியவில் உள்ள லேக் வீதியில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி விக்ரமசிங்க, ஒவ்வொரு வாரமும் தம்மை சந்திக்கும் லான்சாவை, பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின்போது, தம்முடன் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோது இந்த விடயத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.