இலங்கை
உயர்தர பரீட்சை மற்றும் பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
உயர்தர பரீட்சை மற்றும் பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடல் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்கள் குறைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விசேட உரையாற்றவுள்ளார்.
“க.பொ.த உயர்தர பரீட்சையை குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு மாணவர்களுக்கு நியாயத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இந்த பிரச்சினையை மனிதாபினமான ரீதியில் பார்க்க வேண்டும்” என நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (20.09.2023) கல்வி அமைச்சரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை பிற்போட வேண்டும் என ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. அதனால் இதனை மனிதாபிமானமாக அணுகி, பரீட்சையை பிற்போடுவதா இல்லையா என வியாழக்கிழமை (21.09.2023) சபையில் விசேட உரை ஒன்றை மேற்கொள்வேன்.
எனது உரையை அடுத்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார். மாணவர்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்.
பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டால் பாடசாலை விடுமுறை தினங்களை குறைத்து, பாடசாலை நாட்களை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.