வவுனியாவில் அச்சத்தில் மக்கள்! வெளிப்படுத்திய திலீபன் எம்.பி
வவுனியா மாவட்டத்திலே மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.07.2023) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அச்ச உணர்விற்கு மத்தியில் மக்கள்
மேலும் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாக வவுனியா மாவட்டத்திலே மக்கள் அச்ச உணர்வுக்கு மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்று முழு காரணம் பொலிஸார் தான்.
வவுனியா மாவட்டத்திலே இருக்கின்ற நகர பொலிஸ் நிலையம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய குற்றத் தடுப்புப் பிரிவு இந்த இரண்டிலேயும் மக்களுக்கான நம்பிக்கை தற்போது இழந்த நிலைமையே காணப்படுகின்றது.
இது தொடர்பாக இன்று நாங்கள் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். இது தொடர்பாக ஜனாதிபதி அவர்களிடமும் முறையிட இருக்கின்றோம்.
இந்த குற்றச்செயல்கள் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஒருவர் அல்லது இரண்டு பேர் குற்ற செயல்களில் ஈடுபட்டதை அறிந்திருக்கின்றோம்.
தற்போது பத்து, பதினைந்து பேர் ஒன்றாக சென்று ஒரு வீட்டுக்குள்ளே புகுந்து வெட்டி எரித்திருக்கிறார்கள்.
குறித்த சம்பவத்தில் இன்று வரைக்கும் ஒருவர் கூட சந்தேகத்தின் பேரில் கூட கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறி இருக்கிறார்.
எனவே நாங்கள் இவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை சரிவர கண்காணித்து கொண்டுதான் இருக்கிறோம். சில விமர்சனங்கள் இருக்கின்றன. அதனை உரிய இடங்களுக்கு தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment