உலகம்
வான் தாக்குதலில் கொத்தாக கொல்லப்பட்ட பலர்
வான் தாக்குதலில் கொத்தாக கொல்லப்பட்ட பலர்
சூடான் ராணுவம் தலைநகர் மீது முன்னெடுத்த வான் தாக்குதலில், பெண்கள் சிறார்கள் என கொத்தாக 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சூடானின் ஓம்டுர்மான் மாவட்டத்தின் தார் எஸ் சலாம் என்ற பகுதியிலேயே ராணுவம் வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே, சூடான் ராணுவமும் துணை ராணுவப்படையினரும், தலைநகரை கைப்பற்றும் நோக்கில் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் துணை ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், பலி எண்ணிக்கை 31 என குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, அப்பாவி மக்களின் குடியிருப்புகளும் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக துணை ராணுவம் குறிப்பிட்டுள்ளது. சூடான் தலைநகர் கார்டூமின் பெரும்பகுதியையும் அதன் இரட்டை நகரங்களான ஓம்டுர்மன் மற்றும் பஹ்ரியையும் துணை ராணுவப்படையினரே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
சூடான் ராணுவத்தினர் அடிக்கடி தரை வழித் தாக்குதலையும், வான் தாக்குதலையும் முன்னெடுத்து துணை ராணுவத்தினரை சிதறடித்து வருகின்றனர். ஆனால் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்பது, ஒரு தாக்குதலால் ஏற்பட்ட மிகப்பெரிய உயிரிழப்புகளில் ஒன்று என குறிப்பிடுகின்றனர்.
12 வாரங்களாக நீடிக்கும் இந்த சண்டையால், தலைநகரில் வாழும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அங்காடிகள் மற்றும் சந்தைகள் அரிதாகவே திறந்திருக்கும் நிலை உருவாகியுள்ளதுடன் கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ சுகாதார மையங்களும் மூடப்பட்டுள்ளன.
மட்டுமின்றி, நாடு முழுவதும், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login