இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், டக்வத் லூயில் முறைமைக்கு அமைய போட்டி 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்படியாக குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும், தசுன் சானக்க 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 37.1 ஓவர்கள் நிறைவில் கசல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகப்படியாக டேவிட் வோர்னர் 37 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் சாமிக்க கருணாரத்ன 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
#SportsNews
Leave a comment