மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது, உலகப் பொருளாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கிறிஸ்டியன் பர்கர் எச்சரித்துள்ளார். அல்ஜெஸீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில், இந்த நீரிணை உடனடியாகத் திறக்கப்படாவிட்டால், உலகம் மிக மோசமான எரிசக்தி விநியோக நெருக்கடியைச் சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீரிணை வழியாக உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு கையாளப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதே இப்போதைய சூழலில் நடைமுறைச் சாத்தியமான ஒரே தீர்வு என்று வலியுறுத்தியுள்ள பர்கர், அணுசக்தி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது குறித்து சர்வதேச நாடுகள் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களை ஏற்கனவே எதிர்கொண்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையிலும் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வேகமான தாக்குதல் படகுகள் மூலம் எழும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கப்பல்களைப் பாதுகாப்பது சாத்தியமற்றது என அவர் விளக்கியுள்ளார். கப்பல் போக்குவரத்து நெரிசல் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இந்த நீரிணை இன்று திறக்கப்பட்டாலும் கூட இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இராஜதந்திர ரீதியிலான துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடில், எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்து நெருக்கடியானது அடுத்த சில மாதங்களுக்குத் நீடிக்கக்கூடும் என்று பர்கர் கவலை தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையப்புள்ளியான இந்த நீரிணையின் தற்போதைய முடக்கம், ஏற்கனவே பணவீக்கத்தாலும் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.