அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளை நலன்புரி நன்மைகள் சபை தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் கீழ், பயனாளிகளின் பெயர் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயமாகும். இதற்கமைய, ஏற்கனவே சுமார் 2,993,558 நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்சமயம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பயனாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் செல்லும் கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள், அவர்கள் சமர்ப்பித்த தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வார்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கணக்கெடுப்புப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் வீட்டிற்கு வரும்போது, தேசிய அடையாள அட்டைகள், மின்சாரப் பட்டியல் (கடந்த 3 மாதங்கள்), காணி உறுதிப்பத்திரங்கள், வாகன உரிமைப் பத்திரங்கள் மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சபை அறிவுறுத்தியுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவர்களது தரவுகளும் உள்ளடக்கப்படுகின்றன. அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் சரியான முறையில் தகுதியுள்ள நபர்களுக்குச் சென்றடையச் செய்வதே இந்தச் செயன்முறையின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டம் தொடர்பான தகவல்களைச் சமர்ப்பிக்கும்போது, பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், தவறான அல்லது போலியான தகவல்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சபை எச்சரித்துள்ளது.
நலன்புரிச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், இக்கணக்கெடுப்பின் போது எவரேனும் தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, நீதவான் முன்னிலையில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்படும்போது, 5,000 ரூபாவிற்கு மிகாத அபராதம் அல்லது ஓராண்டு கால சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டையுமே தண்டனையாக வழங்க சட்டத்தில் இடமுண்டு. எனவே, தகுதியான பயனாளிகள் தங்களின் சரியான தகவல்களைச் சமர்ப்பித்து, இத்திட்டத்தின் நன்மைகளைத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.