காசாவில் நேற்று (21) இஸ்ரேல் இராணுவம் நடத்திய மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எகிப்து அரசின் மேற்பார்வையில் சாஹ்ரா (Zahra) பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அனஸ் குனைம், அப்துல் ரவூப், மற்றும் ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வாகனம் ட்ரோன்களைப் பயன்படுத்தி இராணுவ இரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு காசா பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவனை இஸ்ரேலிய இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. “காலையில் பசியுடன் சென்ற என் மகன், விறகு எடுத்துக்கொண்டு சீக்கிரம் வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றான்; ஆனால் பிணமாகத்தான் வந்தான்” என அவனது தாய் கண்ணீருடன் கதறினார்.
இதர தாக்குதலில், பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தனர்.
கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதன் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச சமூகத்தின் கண்டனங்களுக்கு மத்தியிலும் காசாவில் வன்முறை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.