கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) விசாரணைக்கு முன்னிலையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லவுள்ளார்.
கரூரில் த.வெ.க சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கும் நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை (Summons) அனுப்பப்பட்டது.
இதனையேற்று, நாளை (12) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லிக்கு புறப்படுகிறார்.
விஜய் டெல்லி வரும் வேளையில் அங்குள்ள தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதைக் கருத்திற்கொண்டு, த.வெ.க சார்பில் டெல்லி காவல்துறையிடம் பாதுகாப்பு கோரப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டெல்லி காவல்துறை, விஜய் தங்கும் விடுதி, அவர் விசாரணைக்குச் செல்லும் சி.பி.ஐ அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உரிய பாதுகாப்பு (High-level Security) வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த டெல்லி பயணம் மற்றும் விசாரணை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.