இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்த பின்னர் ஆற்றிய உரையில், அரசியல் தொடர்புகள், குடும்ப உறவுகள் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி எவரும் இனி வரிகளைத் திருத்தவோ அல்லது ஏய்ப்பு செய்யவோ முடியாது.
கடந்த காலங்களில் ஒரே இரவில் வரி திருத்தங்கள் செய்யப்பட்ட வரலாறு எமக்குத் தெரியும். தணிக்கை அறிக்கைகளில் இவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வரி வசூலிப்பதற்கான தற்போதைய சட்டங்கள் போதாது என்றால், அவற்றை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களைக் காரணம் காட்டி வாகன இறக்குமதியை நிறுத்துமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும், அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கத்திடம் போதுமான நிதி உள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு உதவிகள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ள ஆண்டாகும். எனவே, அனர்த்தங்களுக்காக வாகன இறக்குமதியை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
2025 ஆம் ஆண்டில் மட்டும் வாகனப் பழுதுபார்ப்புக்காக 25 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், புதிய வாகனங்களின் தேவை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு ஏப்ரல் மாதத்தில் சரிந்துவிடும் எனப் பரப்பப்பட்ட வதந்திகளைப் பொய்ப்பிக்கும் வகையில் பொருளாதாரக் காரணிகள் சாதகமாக அமைந்துள்ளன. அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய அனைத்து வரிப்பணத்தையும் முறையாகத் திரட்டுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து போராடுவோம் என ஜனாதிபதி இதன்போது அறைகூவல் விடுத்தார்.