விண்வெளி ஆராய்ச்சியில் இழந்த தனது முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் நோக்கில், அடுத்த தசாப்தத்திற்குள் (2036-க்குள்) நிலவின் மேற்பரப்பில் ஓர் அணுசக்தி நிலையத்தை அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
நிலவில் இரவு நேரம் சுமார் 14 பூமி நாட்கள் வரை நீடிக்கும் என்பதால், அங்கு சூரிய சக்தி எப்போதும் கிடைக்காது. எனவே, நிலவில் அமையவுள்ள ஆராய்ச்சி நிலையங்கள், ரோவர்கள் மற்றும் ஆய்வகங்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்க அணுசக்தி நிலையமே சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.
சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் (ILRS): ரஷ்யாவும் சீனாவும் இணைந்து உருவாக்கி வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு பகுதியாகவே அணுசக்தி நிலையம் அமையவுள்ளது.
இது விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்று திரும்புவதுடன் நின்றுவிடாமல், அங்கு மனிதர்கள் நிரந்தரமாகத் தங்கி ஆய்வு செய்ய வழிவகுக்கும்.
ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos), நாட்டின் முன்னணி அணுசக்தி நிறுவனமான ரோஸ்டோம், அணு ஆராய்ச்சி நிலையமான குர்ச்சடோவ் மற்றும் விண்கலங்களை வடிவமைக்கும் லாவோச்கின் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.
1961-ல் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பிப் புரட்சி செய்த ரஷ்யாவுக்கு, சமீபத்திய அமெரிக்கா மற்றும் சீனாவின் வளர்ச்சி பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக 2023-ல் ‘லூனா-25’ விண்கலம் தோல்வியடைந்த நிலையில், தனது பெருமையை மீட்டெடுக்க ரஷ்யா இம்முயற்சியில் இறங்கியுள்ளது.
மேலும், நிலவைத் தொடர்ந்து ‘பூமியின் சகோதரி கிரகம்’ எனப்படும் வெள்ளி (Venus) கிரகத்தை ஆய்வு செய்யவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி பகனோவ் தெரிவித்துள்ளார்.