உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இம்முறை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இந்தத் தொடரை நடத்துகின்றன.
முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் திருவிழா மொத்தம் 39 நாட்கள் நடைபெறவுள்ளது.
மொத்தமாக 104 போட்டிகள் நடைபெற உள்ளன.போட்டித் தொடர் ஜூன் 11, 2026-இல் தொடங்குகிறது. தொடக்கப் போட்டி, மெக்சிகோ நகரத்தில் உள்ள புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மெக்சிகோ, தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன.
உலகக் கிண்ணக் கால்பந்து திருவிழா ஜூலை 19, 2026 அன்று நியூ ஜெர்சி பகுதியில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது.
நடப்புச் சாம்பியனான மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, ஜூன் 16 அன்று கன்சாஸ் சிட்டியில் நடைபெறும் போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக விளையாடுகிறது. அதையடுத்து, ஆஸ்திரியா, ஜோர்டன் ஆகிய அணிகளுடன் டல்லஸில் வைத்து மோதுகிறது.1994 அமெரிக்க உலகக் கிண்ணத்தை நினைவூட்டும் வகையில், பிரேசில் அணி ஜூன் 13 அன்று மொரோக்கோவை எதிர்கொள்கிறது.
உலகத் தரவரிசைப் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கும் ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்பு ஒன்றை ஒன்று சந்திக்காதபடி அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.