அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவத்தில், மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவைச் சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயதுடைய குடும்பப் பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று (டிசம்பர் 6) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டினுள் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டரிலிருந்து கசிந்த காபன் மொனொக்சைட் (Carbon monoxide) வாயுவைச் சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தன்று குறித்த வீட்டில் தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளனர். அனர்த்தம் ஏற்பட்டதை உணர்ந்த உறவினர்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் தந்தை மற்றும் மகள் ஆகியோர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிகாட்டலிலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வேண்டுகோளிற்கிணங்கவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்ட வைத்திய அதிகாரி கசுன் பெரேரா பங்கேற்புடன், மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றது.
சட்ட நடைமுறைகள் மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.