இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரேனா வில்லியம்ஸ் (Serena Williams), மீண்டும் டென்னிஸ் போட்டிகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும், தான் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்பப் போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஓய்வு: 44 வயதாகும் வில்லியம்ஸ், கடந்த 2022 அமெரிக்க ஓபனைத் தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
எனினும், சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு நிறுவனம் (ITIA) வெளியிட்ட வீரர்கள் பதிவுக்கான ஊக்கமருந்து சோதனை குழாத்தில் வில்லியம்ஸின் பெயர் இருந்தது. அந்த அமைப்பு மிக அண்மையில் ஒக்டோபர் 6ஆம் திகதி வெளியிட்ட ஆவணத்திலும் அவரது பெயர் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.
எவ்வாறாயினும், வில்லியம்ஸ் வெளியிட்டிருக்கும் சமூக ஊடகப் பதிவில், “நான் மீண்டும் திரும்ப வரமாட்டேன். இந்தக் காட்டுத் தீ பைத்தியக்காரத்தனமானது” என்று குறிப்பிட்டு, மீண்டும் விளையாட வரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
டென்னிஸ் அரங்கில் அதிக ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களில், மார்க்ரேட் கோர்ட் மற்றும் நொவக் ட்ஜோவிக் ஆகியோருக்கு மாத்திரமே வில்லியம்ஸ் பின்தங்கியுள்ளார்.
செரேனா வில்லியம்ஸ் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்:
அவுஸ்திரேலிய ஓபன்: 7 முறை
பிரெஞ்ச் ஓபன்: 3 முறை
விம்பிள்டன்: 7 முறை
அமெரிக்க ஓபன்: 6 தடவைகள்
முன்னதாக, செரேனா வில்லியம்ஸின் மூத்த சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் 16 மாதங்களுக்குப் பின்னர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் டென்னிஸ் போட்டிகளுக்குத் திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.