மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறியும் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ கேரட்டை ரூ. 3,500-க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள், காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறிக் கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு வியாபாரி ஒரு கிலோ கேரட்டைச் சந்தை விலையைவிடப் பன்மடங்கு அதிகமாக ரூ. 3,500-க்கு விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குறித்த வியாபாரிக்கு எதிராகக் நீதிமன்றத்தில் வழக்குத் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் வர்த்தகர்கள் குறித்துக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை எச்சரித்துள்ளது.