வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (Public Health Inspectors’ Union – PHI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ள முக்கிய ஆலோசனைகள் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறும், இயலுமானவரை கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சிறிய குழந்தைகளுக்கும் கொதித்தாறிய நீரை மட்டுமே குடிப்பதற்கு வழங்குமாறும் குறிப்பிட்டார். அசுத்தமான நீரைப் பயன்படுத்துவதால் வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்க வாய்ப்புள்ளதால், வீடுகளைச் சுத்தம் செய்யும் போது அவற்றை அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு செய்யாவிட்டால், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட மேலும் சுட்டிக்காட்டினார்.