ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான சகனோஸ்கி (Saganoseki) நகரத்தின் துறைமுகப் பகுதியில் நேற்று (நவம்பர் 19) திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 170 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சகனோஸ்கி நகரம் கடற்கரை நகரமாகும். இங்கிருந்து பிடிக்கப்படும் உயர்தரமான சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த மீன் ஏற்றுமதிக்காக அமைக்கப்பட்ட துறைமுகம், மீன்களை உறைய வைக்கவும் பதப்படுத்தவும் கட்டப்பட்ட கிடங்குகள் (Warehouses), மற்றும் மீனவர்களின் வீடுகள் எனப் பல கட்டிடங்களுக்குத் தீ வேகமாகப் பரவியது.
தீவிபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே துறைமுகத்தில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமான இக்கோர விபத்தில், ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.