மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக் கட்சிகளுடன் பேசியே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அறிவித்துள்ளது.
ரெலோ கட்சியின் தலைமைக் குழுக் கூட்டம் நேற்று (நவம்பர் 9) வவுனியாவில் நடைபெற்ற நிலையில், அதன் நிறைவில் ஊடகங்களிடம் பேசிய கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன, என்று கு. சுரேந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அத்துடன், தமிழ்த் தேசியப் பேரவையுடன் புரிந்துணர்வு ஒன்றையும் மேற்கொண்டிருக்கின்றோம், என்றும் அவர் விளக்கினார்.
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.