ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மீதான கடன் மோசடி வழக்குகளைத் தொடர்ந்து, அனில் அம்பானி குழுமத்தின் மீது அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சமீபத்திய நடவடிக்கையில், 7,500 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதில், நவி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி அறிவுக் கிராமத்தின் (Dhirubhai Ambani Knowledge City) நிலம் போன்ற முக்கியச் சொத்துக்களும் அடங்கும்.
மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது பல வங்கிகளில் பெற்ற கடன்களை மோசடியாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிறுவனங்கள் 2010 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் பெற்ற கடன்கள் மூலம் 40,185 கோடி ரூபாய்க்கு அதிகமான நிலுவைத் தொகையை வைத்துள்ளன. ஐந்து வங்கிகள் இந்த நிறுவனங்களின் கடன் கணக்குகளை மோசடியானது என முறைப்படி அறிவித்துள்ளன.
விசாரணை அறிக்கையின்படி, கடன் தொகையில் சுமார் 13,600 கோடி ரூபாய் ‘கடன்களைத் தொடர்ந்து புதுப்பித்தல்’ என்ற பெயரில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், 12,600 கோடி ரூபாய், நெருங்கிய தொடர்புடைய தரப்பினருக்கு மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சொத்துப் பறிமுதல் நடவடிக்கை, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மேற்கொள்ளப்பட்டது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Reliance Infrastructure Limited) இந்தச் சொத்துப் பறிமுதலால் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள், பங்குதாரர்களின் நலன்கள் அல்லது பணியாளர்களின் நலன்கள் பாதிக்கப்படாது எனப் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது. மேலும், அனில் அம்பானி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் குழுமத்தின் இயக்குநர் குழாமில் இல்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
(அனைத்துப் பெறுமதிகளும் இந்திய ரூபாவில்)