தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, நாட்டில் எந்த நேரத்தில், எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத நிலை உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு பேசினார்.
அவர் கூறியதாவது, மக்களை வாழ வைப்பதே ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. இந்த வருடம் மட்டும் அதிக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதால், உயிரிழப்புகளும் காயங்களும் அதிகரித்துள்ளன. பொது மக்கள் தின நடவடிக்கைகள் நடைபெற்று வரும்போதே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூட கொலை செய்யப்பட்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பொது மக்கள் தினம் நடத்தப்படுகிறது.
இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் சரியான வேலைத்திட்டம் இல்லை. இந்த அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் ஒருவர் பொது மக்கள் தின நடவடிக்கையின்போது படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடப்பதற்கு முன்னர், தனக்கு உயிராபத்து உள்ளது, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.
“இன்று சமூகத்தில் எங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்கவும் முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.