முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக மொட்டுக் கட்சி தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றார்.
இந்தச் சட்டத்தின்படி, ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளும் அரசாங்கத்தின் மூலம் மீளப் பெறப்படும்.
அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் டொயோட்டா லேண்ட் ரோவர் ஆகிய வாகனங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன.
இவ்வாறு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத கார் பழுதுபார்ப்பதற்காக பல மாதங்களாக மாத்தறையில் உள்ள வாகன பழுது பார்க்கும் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
பழுதுபார்ப்பு இன்னும் நிறைவடையவில்லை எனவும் வாகனத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, லேண்ட் ரோவர் நேற்று (02.10.2025) தங்காலையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதுடன் இன்று (03.10.2025) ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு வாகனங்களும் இல்லாத நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்க ஒரு வாகனம் கூட இல்லை என மொட்டுக் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
குண்டு துளைக்காத வாகனம் இல்லாததால் மகிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் போக்குவரத்துக்காக இரண்டு தனிப்பட்ட சாரதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இரு நியமனங்களும் நேற்று முன்தினம் (01.10.2025) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.