தெலுங்கில் ரவி பாபு இயக்கிய நுவ்விலா படத்தில் நடிக்க அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. துணை நடிகராக இருந்த இவர் கடந்த 2016ம் ஆண்டு பெல்லி சூப்புலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இப்படத்தின் வெற்றியடைய அடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த படம் தான் அர்ஜுன் ரெட்டி, படம் பிரம்மாண்ட வெற்றியடைய தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக்கும் ஆனது.
பின் இவர் நடித்த மகாநதி, கீதா கோவிந்தம், டாக்வி வாலா, குஷி என அடுத்தடுத்த படங்கள் ஹிட் அடிக்க ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது ‘கிங்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்த இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அனிருத் குறித்து விஜய் தேவரகொண்டா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “விஐபி மற்றும் 3 போன்ற படங்களைப் பார்த்தபோது, அனிருத் மீது எனக்கு அன்பு உருவானது.
யார் இந்த மேதை? அவர் சாதாரணமான ஒருவர் இல்லை என தோன்றியது. அப்போது, நான் நடிகராகவில்லை. ஆனால், நான் எப்போதாவது ஒரு நடிகராக மாறினால், என் படங்களுக்கு இவர் தான் இசையமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
நான் ஒரு ராஜாவா இருந்திருந்தால், அனிருத்தை கடத்தி வந்து அரண்மனையில் வைத்து என் படங்களுக்கு மட்டும் இசையமைக்க செய்திருப்பேன். அனிருத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல வருடங்களாக காத்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.